Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிக புழக்கம் குற்ற சம்பங்கள் அதனால் பெருக்கம் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பால் குற்றச்சம்பவங்கள் உயர்வு குறித்து சமூக அமைப்புகள் கவலை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளது. கடந்த ஆண்டுகளில் போதை வழக்குகளில் 30% கைதுகள் 21 வயதிற்கும் குறைவானவர்கள் என வரும் செய்திகள் அதிர்ச்சியினை அளிப்பதாக உள்ளது. இது இப்பிரச்னையின் வீரியத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்ல நமது நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை விமான நிலையம் அருகே 20 வயது கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் காரில் இருந்தபோது 3 நபர்களால் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். போலீசார் விசாரணையில் அம்மூவரும் மதுபோதையில் இக்குற்றத்தை நிகழ்த்தியதாக தெரியவந்தது. தூத்துக்குடியில் நடைபெற்ற பள்ளி மாணவி பாலியல் கொலையிலும் மதுபோதையில் குற்றவாளிகள் இக்குற்றம் நிகழ்த்தியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோலவே தொடர்ச்சியாக அரங்கேறி வரும் பல்வேறு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், மோதல்கள் உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில் போதை பயன்பாடு பிரதானமாய் உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டபிரிவு 47 அரசு மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால் தமிழக அரசு வீதிக்கு வீதி மதுபானக்கடைகளை திறந்து தங்குதடையின்றி மதுவை விநியோகம் செய்து வருகிறது. 2024-25 ஆண்டில் இதன் வருமானம் ரூ 48,344 கோடியாகும். இது முந்தைய ஆண்டை விட 2488 கோடி அதிகமாகும். தீபாவளி 2025 ல் 3 நாட்களில் மட்டும் ரூ 789.85 கோடிக்கும், பொங்கல் 2026 ல் 2 நாட்களில் மட்டும் ரூ 518 கோடி மது விற்பனை நடந்து உள்ளது. தினசரி சராசரியாக ரூ 150 கோடிக்கு மதுவிற்பனையாவதால் தமிழகம் தள்ளாடுகிறது. இதன் வருவாய் வளர்ச்சி நம் தலைமுறையின் வீழ்ச்சி.

இதுபோலவே கஞ்சா மற்றும் Methamphetamine, LSD, Mathaqualone, narcotic tablets உள்ளிட்ட ரசாயன போதை பொருட்களின் புழக்கமும் தீவிரமாக பெருகி உள்ளது. 2023 லிருந்து 2024 ம் ஆண்டு 255% அதிகரித்து உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. மேலும் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டவையும் இதற்கு அத்தாட்சியாய் உள்ளன. ஆந்திரா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மும்பை, குஜராத் பகுதிகளுக்கு கடல்மார்க்கமாகவும் போதை பொருட்கள் வந்து தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருகின்றன.

தேசிய குற்றப் பதிவு ஆவணக்காப்பகம் பெருகிய போதை பொருட்கள் புழக்கத்தால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளதை ஒப்புக்கொள்கிறது. இதன்மூலம் குடும்ப வன்முறை, விபத்துக்கள், வன்முறைகள், குற்ற சம்பவங்கள் பெருகுவதோடு சமூக அமைதியும் சீர்குலைகிறது. மேலும் இதற்கு அடிமையாவதால் இளைஞர்களின் மனம் மற்றும் உடல்நலன் பாதிப்பிற்கு உள்ளாகி அவர்களது எதிர்காலமே பாழாகும் நிலையே உள்ளது. இருந்தும் வருவாயை பற்றி சிந்திக்கும் அரசு இவர்களது வாழ்வை பற்றி சிந்திக்காதது இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஏற்படுத்தும் துரோகமாகும். எனவே போதை ஒழிக்க உறுதிமொழி எடுப்பதோடு நில்லாமல் இது ஒரு சமூக பிரச்னையாக கருதி அரசு கடும் நடவடிக்கை எடுப்பது அவசர அவசியமானதாகும்.