Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

கடலில் காணாமல்போன மீனவர் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கடலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

இந்தியாவில் கடலில் காணாமல் போன மீனவர் மற்றும் தொலைந்து போனவர் குறித்த உரிய தகவல் கிடைக்காதவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பொதுவாக 7 ஆண்டுகள் கழித்து தான் வழங்கப்படுகிறது. இது இந்திய சாட்சிய சட்டம் 1872ன் பிரிவு 108 அடிப்படையில் அமைந்து உள்ளது. இதன்படி கடலில் காணாமல் போன மீனவர்கள், இயற்கை சீற்றங்களால் இவ்வாறு பாதிக்கப்படும் சூழலில் 7 ஆண்டுகள் கடந்தே இறப்பு சான்றிதழ் கிடைப்பதால் அரசின் நிவாரணம் மற்றும் உதவிகள் கிடைப்பதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.

கடந்த 2009ல் குமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் வல்ல விளை கிராமங்களைச் சேர்ந்த 8 மீனவர்கள் கேரளாவில் அழிக்கால் அருகே சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டு மாயமாகினர். இவர்களது குடும்பத்தினர் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்த பின்பே 15 ஆண்டுகள் கழித்து (2024ம் ஆண்டில்) இறப்பு சான்றிதழ் கிடைத்தது. இதுபோலவே கடந்த 2017ல் ஒக்கி புயலில் காணாமல் போன 167 பேர்களுக்கு இதுவரையில் உரிய சான்று வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் 5 முதல் 10 மீனவர்கள் கடல் விபத்துக்கள் அல்லது புயலால் மாயமாகின்றனர். இதுபோலவே ஏனையப் பகுதிகளிலும் மீனவர் காணாமல் போகும் நிலையில் அதன் தவிப்பு ஒருபுறம் உரிய இழப்பீடு பெற இயலாத நிலை மறுபுறம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகும் நிலை தொடர்கதையாக உள்ளது. இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் காலதாமதத்தால் நிவாரண உதவி, சொத்து பரிமாற்றம், கடன் தள்ளுபடி, குழந்தைகளின் கல்வி உதவி, விதவை பென்சன் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளும் கிடைக்காமல் இவர்கள் பரிதவிக்க நேரிடுகின்றது.

குமரி மாவட்டத்தில் 48 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாவதுடன் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்பத்தினர் இத்தகைய நடைமுறையினால் பெரிதும் துன்பப்படுகின்றனர். உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வாழ்க்கையினை நடத்தி வரும் இவர்கள் காணாமல் போகும் சூழலில் குடும்பத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அவர்களது துயரை துடைக்க ஆதரவு கரம் நீட்ட வேண்டியது அவசியம்.

எனவே கடலில் காணாமல் போன மீனவர்களுக்கு 7 வருடங்கள் கடந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறையினை மாற்றி ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் வகையில் உரிய சட்டதிருத்தம் செய்திட வேண்டும். இதன் மூலம் மீனவர் காப்பீடு மற்றும் நிவாரண நிதி குடும்பத்தினருக்கு எளிதில் கிடைக்க இது வாய்ப்பினை உருவாக்கிடும். கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்கள் வாழ்க்கையில் இருக்கும் போது மட்டுமல்ல இறந்த பின்பும் ஏற்படும் இன்னலை போக்கிட ஆட்சியாளர்கள் அக்கறை காட்டிட வேண்டும்.