Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

நாமக்கல்லில் மலையை விழுங்கிய மகாசூரர்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

நாமக்கல் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிகள் மூலம் மலை அழிக்கப்பட்ட காட்சி

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம், எருமைப்பட்டி, வேலு குறிச்சி, கொண்டமநாயக்கன் பட்டி, விட்டமநாயக்கன் பட்டி,அக்கியம்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கல்குறிச்சி, உத்திரகிடி காவல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல இடங்களில் அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாகவும், உரிய அனுமதி அளிக்கப்பட்டு குறிப்பிட்ட நாள் கடந்தபின்பும் சட்டவிரோதமாக பல்வேறு குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு வகைகளில் மாவட்ட மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

கல்குவாரிகள் அரசு அனுமதித்ததை விட அதிக ஆழத்திற்கு வெட்டப்படுவதால் அருகாமையில் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பாறை வெடிப்புகளில் இருந்து வெளியேறும் நச்சு நீரால் நிலத்தடி நீர் மாசாகிறது. குவாரிகளில் இருந்து வெளிவரும் சத்தம் ஒலி மாசை ஏற்படுத்துவதோடு வெளியாகும் தூசுக்கள் விவசாய நிலங்களில் படிந்து மகரந்தசேர்க்கை பாதிப்பதால் பயிர் விளைச்சல் அடியோடு பாதிக்கப்படுகிறது.

வெடிப்புக்கள் 2கி.மீ வரை அதிர்வுகளை ஏற்படுத்துவதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை உள்ளது. மேலும் பறவைகள், சிறு உயிரினங்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால் பல்லுயிர் பெருக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆழமான செங்குத்து கல்குவாரிகளால் நிலசரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதோடு ஆபத்தான இப்பள்ளதாக்குகளில் மனிதர்களும், விலங்குகளும் விழுந்து இறப்பை சந்திக்கும் நிலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கு 400க்கும் மேற்பட்டவர்கள் இறந்து உள்ளனர். மக்களுக்கு இக்குவாரிகளால் ஆஸ்துமா, நுரையிரல் தொற்று, ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.

சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன் பட்டி பகுதியில் சுமார் 140 ஏக்கர் பரப்பளவிலான மலை முழுவதும் சட்டவிரோதமாக 500 அடி வரை ஆழமாக வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் குத்தகை காலம் முடிந்த பின்பும் பல குவாரிகள் இரவு,பகலாக ஓய்வின்றி செயல்பட்டு வருகின்றன. கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டவிரோத கனிமவளக் கடத்தலில் ஈடுபட்ட 21 லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொண்டம நாயக்கன்பட்டி மற்றும் விட்டமநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது போல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கனிமவளத் திருட்டு தொடர்பாக 96 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். இத்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ 2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் இதுநாள் வரையில் குறிப்பிட்ட பகுதியில் தங்குதடையின்றி கனிமவளக் கடத்தல் நடந்து வருகிறது. இதுதொடர்பாக சுற்றுவட்டார கிராம மக்கள் புகார் தெரிவித்த போதும் கடத்தல் பேர்வழிகள் அரசியல் பின்புலம் இருப்பதால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் சுற்றுசூழல் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவதோடு அரசிற்கும் பல கோடி இழப்பு ஏற்படும் நிலையே உள்ளது. எனவே மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சட்டவிரோதமாக கனிமவள திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். எஞ்சிய கனிமவளங்களையாவது இந்த மலை விழுங்கி மாஃபியாக்களிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.

கனிமவள கடத்தல் மற்றும் சட்ட நடவடிக்கைகள்
environmental damage quarry india, groundwater depletion quarry, quarry pollution tamilnadu