சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கனிம வளம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு சென்று வந்தது. இவற்றிற்கு நேரக் கட்டுப்பாடு, வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட போதும் அதனை கண்டுகொள்ளாமல் இவ்வாகனங்கள் சென்றன. இதனால் குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்பட்டு அதனால் பலர் உயிர் இழக்க நேரிட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதமும் ஓர் மாணவி அதிவேகமாக வந்த கனரக வாகனம் மோதி தக்கலை பகுதியில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து 10.4.2026 அன்று குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் R அழகுமீனா மற்றும் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் ஆகியோர் குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்கின்றன. குமரி மாவட்டத்தில் கனிமவள வாகனங்களுக்கு விதித்த தடையால் விபத்துக்கள் ஏற்படாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் கனிமவள வாகனங்களை குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு சென்றால் என்ன தவறு? கேரளா இந்தியாவில் தானே இருக்கிறது? துபாயிலா இருக்கிறது? என மக்கள் உணர்வுகளுக்கு எதிராக அடாவடியாக பதில் தெரிவித்து உள்ளார். கேரளாவில் இருந்து கனிமவளம் தமிழ்நாட்டிற்கு வருவது இல்லையே என்ற கேள்விக்கு அது அவர்கள் தவறு என கனிமவள கடத்தலுக்கு ஆதரவாக பதில் அளித்து உள்ளார்.
குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நடவடிக்கையால் மூடப்பட்டது. தமிழகம் முழுக்க கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆளுங்கட்சியினரின் ஆசியோடு செயல்பட்டு வந்த கல்குவாரிகளால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழலும், விவசாயமும், நிலத்தடி நீரும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இத்தகைய விதிமீறல்களை தட்டிகேட்பவர்கள் கொலை செய்யப்பட்டதும் தொடர்ச்சியாக அரங்கேறி வந்தது. தற்போது சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் தமிழக அரசால் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இச்சூழலில் மக்கள் விரோத செயலிற்கு ஆதரவாகவும், கனிமவளக் கடத்தலிற்கு உடந்தையாக திருச்செந்தூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசி உள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம். கனிமவள வாகனங்கள் கேரளாவிற்கு செல்லாததால் குமரி மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாறி வருகிறது. இதற்கு ஊறுவிளைவிப்பது போல் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுவது பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது என்பது போல அவர்களது செயல்பாடுகளை வெட்ட வெளிச்சப்படுத்தி உள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு மக்கள் உரிய தீர்ப்பு எழுதியபோதும் அதனை நிராகரித்து மீண்டும் தவறுகளுக்கு தேர்வு எழுதுபவர்கள் எப்போது தான் திருந்துவார்கள்?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

