Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

பாமாயில் இறக்குமதி செய்வதற்கு பதில் தேங்காய் எண்ணை ரேஷன் கடையில் வழங்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

பாமாயிலுக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான காட்சி

தமிழக ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான சமையல் எண்ணெய்க்காக பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது. இவை இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாமாயில் ரேஷன் கடைகளில் ரூ 25 என்னும் விலையில் விற்கப்படும் நிலையில் அதற்கான மானியத்தொகை ரூ 120 வரையில் விலைக்கு வாங்கப்படும் நாடுகளுக்கு அரசு செலுத்தி வருகிறது. மாதத்திற்கு சுமார் 2 கோடி லிட்டர் தேவைப்படும் நிலையில் இதற்கென கடந்த 2025ல் மட்டும் ரூ 2865 கோடி அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த தொகை முழுக்க முழுக்க பாமாயில் கொள்முதல் செய்யப்படும் நாடுகளுக்கே கிடைக்கிறது. இதனால் நமது விவசாயிகள் எந்த வகையிலும் பயன்பெற மாட்டார்கள். பாமாயிலில் சுமார் 50% நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இதன் பால்மிடிக் அமிலம் கெட்ட கொழுப்பை அதிகரித்து தமனிகளை கடினப்படுத்தி மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் நீரிழிவு, உடல்பருமன் அதிகரிப்பு, செரிமான பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு உயர்வெப்பத்தில் பாமாயிலை சூடாக்குவதால் Glycidy esters(GE) எனும் பொருள் உருவாகி புற்றுநோய் உருவாகும் அபாயமும் உள்ளது. சிப்ஸ், பிஸ்கட், கேக், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களில் பயன்படுத்தபடுவதால் நமக்கு தீங்கே அதிகம்.

பாமாயில் பயிரிட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெப்பமண்டலக் காடுகள் அழிக்கப்படுகின்றன. இது உலகின் மிக முக்கியமான பல்லுயிர் பகுதிகளை அழிக்கிறது. இதனால் மிக்மி யானை, சுமத்ரா ரைனோ உள்ளிட்ட அரியவகை உயிரினங்களின் வாழிடம் அழிகிறது. காடுகள் அழிப்பு கார்பன் வெளியேற்றத்தை அதிகரித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படவும் காரணமாகிறது.பாமாயில் தோட்டங்களால் மழைக்காடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இந்தோனேஷியாவில் கடந்த 20 ஆண்டுகளில் பழைய வனப்பகுதியில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் இழப்பினை சந்தித்து உள்ளது.

இதற்கு மாற்றாக நமது நாட்டில் விளையும் தென்னை, எள் உள்ளிட்டவற்றில் இருந்து எண்ணையை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக வழங்கலாம். இதற்கான அரசின் மானியத்தொகை நமது விவசாயிகளிடம் போய் சேருவதால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதோடு, குறிப்பிட்ட பயிர் விவசாயமும் வருவாய் இழப்பினை சந்திப்பது தடுப்பதாக அமையும். அந்நிய நாட்டு விவசாயிகளை வாழவைத்து நமது நாட்டு விவசாயிகளை, விவசாயத்தை அழிக்கும் வகையிலேயே தற்போதைய நடைமுறை உள்ளது.

இந்தியா உலகின் முக்கிய தேங்காய் உற்பத்தியாளர்களில் ஒன்றாய் உள்ள நிலையில் தமிழகம் இதில் சிறப்பான பங்கை வகிக்கும் வகையில் திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக செய்யப்படுவதால் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு, இவ்விவசாயமும் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.மத்திய தேங்காய் வளர்ச்சி வாரியம் இதற்கு பச்சைக்கொடி காட்டி உள்ள நிலையில் தமிழக விவசாயிகள் வாழ்வும் பசுமையாக இத்திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்திட முன்வரவேண்டும்.

palm oil import india
பாமாயில் ஆரோக்கிய பாதிப்பு விவசாயிகள் நலன்