Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் கனல் பூமியாக மாறிய கரூர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

கரூர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு காட்சி

கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகள் கடந்த 2023ல் கள ஆய்வு நடத்தி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி கரூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெப்பநிலை 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் அதிகரித்து உள்ளது. காடுகள் மற்றும் பசுமைப் பகுதிகளை அழித்து குவாரிகள் மூலம் திறந்த நிலங்கள் உருவாகின்றன. இது வெப்ப அதிகரிப்புக்கு காரணமாகிறது.

மேலும் கல் உடைத்தல், கிரஷர் யூனிட்டுகள் வெளிப்படுத்தும் பெருமளவிலான தூசி சூரிய ஒளியை அதிகம் உறிஞ்சி வெப்பத்தை தக்க வைக்கின்றன. கரூர் கடலில் இருந்து தொலைவில் உள்ளது. எனவே கடற்காற்று வெப்பத்தை குறைக்க வழியில்லை. இப்பகுதியில் மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண் நிறைந்து உள்ளது. இது ஈரபதத்தை தக்க வைக்காது. வெப்பத்தை வேகமாக உறிஞ்சி விடும். இதனால் வறண்ட இப்பகுதியில் கல்குவாரிகளுக்கென பசுமை பரப்பளவு அழிக்கப்படுவதால் மேலும் பாதிப்பு அதிகமாகி அனல் பகுதியாக மாறி வருகிறது.

விவசாய பூமியாக இருந்த கரூர் இப்போது கல்குவாரிகளின் ஆதிக்கத்தால் 33% அளவு இருக்க வேண்டி பசுமை பரப்பு தற்போது 4% மட்டுமே உள்ளது. மேலும் இங்குள்ள சிமெண்ட் ஆலை, சர்க்கரை ஆலை, பவர் கிரிட் எனப்படும் மின்கோபுரங்கள், பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகள் போன்றவையும் வெப்பத்தை அதிகரிக்க காரணமாகிறது. இதனால் இங்குள்ள க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகள் வெப்பத் தீவாகவே காட்சி அளிக்கின்றன.இதனால் இப்பகுதி பாலை வனமாக தென்படுவதோடு காலநிலை மாற்றத்திற்கும் காலடி எடுத்து வைக்கிறது.

இங்கு பல்வேறு சட்டவிரோத குவாரிகளும் செயல்படும் நிலையில் அவை கட்டுப்பாடு இன்றி கனிமவளங்களை சுரண்டுவதோடு இப்பகுதியில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உருவாக்கி வருகின்றன.இக் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் விவசாயம் அடியோடு அழிந்து உள்ளது. மேலும் குவாரிகளில் வெடிவைப்பதில் உள்ள அதிர்வால் பல வீடுகள் இடிந்து உள்ளதோடு இப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளுக்கும் காரணமாகிறது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இவர்கள் திரிசங்கு நிலையில் வாழ்கின்றனர்.

க.பரமத்தி, புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதின் விளைவாக ரூ 44 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இருந்தும் அதனைப் பற்றி கண்டு கொள்ளாமல் அரசுத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆசியோடு இங்கு கனிம வளக் கொள்ளை தொடர்கிறது. இதனால் வெப்ப தாக்கம் மூலமாக இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்திய போதும் அதனை கண்டு கொள்ள மறுப்பது பேராபத்தினை நாமே வரவேற்பதாக உள்ளது. எனவே வாழத் தகுதியற்ற நிலப்பரப்பாக இது மாறுவதை தடுக்க குவாரிகளை கட்டுபடுத்துவதோடு சுற்றுச்சூழல் விதிகளை கடுமையாக அமல்படுத்திட வேண்டும். மேலும் மரம் நடுதல் மூலமாக பசுமை பரப்பை அதிகரிப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது அவசர அவசியம்.

environmental damage karur, climate change tamilnadu
தமிழ்நாடு சுற்றுச்சூழல் செய்திகள்
சட்டவிரோத கல்குவாரி பிரச்சனைகள்
காலநிலை மாற்றம் தமிழ்நாடு
பசுமை பாதுகாப்பு கட்டுரைகள்