சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கல்லூரி விழாக்களில் சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்தராததோடு கல்லூரி வளாகம் கல்வி மையம் என்பதில் இருந்து கேளிக்கை மையம் ஆகவே மாறிவருகிறது. விழாக்கள் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். ஆனால் நட்சத்திரங்களின் வருகையால் அவர்களது திறமைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு நட்சத்திரங்கள் மட்டுமே பிரதானமாக முன்னிலைப்படுத்தும் மேடையாக விழா மாறிப் போகிறது.
விமர்சன சிந்தனை, அறிவியல் அணுகுமுறை, சமூக பொறுப்புணர்வு ஆகியவை பின்னுக்கு தள்ளப்படுகிறது. மாணவர்கள் அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் ஆக மாறுவதற்கு பதில் ரசிகர் ஆக மாற்றப்படுகின்றனர். ஹீரோ வழிபாடு மற்றும் புகழ் வழிபாடு இதன்மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் தவறான முன் உதாரணங்களை ஊக்குவிப்பதுடன் உண்மையிலேயே சமூக மேம்பாட்டிற்கு பங்காற்றியவர்களை நினைவு கூறவும், அவர்களை அங்கீகரிக்கவும் தவறுவதாகவே உள்ளது.
கல்லூரி விழாக்கள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கானவை. கலை, இலக்கியம், விவாதம், தொழில்நுட்பம், விளையாட்டு போன்றவை இவற்றில் மையமாக இருக்க வேண்டும். ஆனால் இதில் இருந்து தடம்புரண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய கல்லூரிகளே மாணவர்களின் புத்தியினை மழுங்கடிக்கும் விதமாக இச்செயல்களில் ஈடுபடுவது வேதனை தருவதாகவே உள்ளது. அரசு பள்ளி விழாக்களில் திரைப்பட பாடல்கள் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் UGC (University Grants Commission) இவ்விஷயத்தில் சரிவர தெளிவான முடிவுகளை தெரிவிக்கவில்லை. மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில் உண்மையான திறன் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் இவ்விழாக்கள் இருக்க வேண்டும். குறிப்பாக உண்மையான கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலை இவற்றின் வெளிப்பாடாக இருந்தால் இவ்விழாக்கள் மாணவர்கள் வாழ்க்கைக்கு திசைகாட்டியாய், திருப்புமுனையாய், இனிய அனுபவமாய் என்றென்றும் மறவாதிருக்கும்.
இளம் கலைஞர்கள், இசைக்குழுக்கள், நாடக குழுக்களுக்கு இம்மேடையினை அளிப்பதின் மூலம் அவர்களது படைப்பாற்றலை ஊக்குவிப்பதாய் அமையும். எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாள்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், ராணுவ வீரர்கள், சாதனையாளர்கள் உள்ளிட்டவர்களை இவ்விழாவில் விருந்தினர்களாக அழைக்கலாம். இது மாணவர்களின் சிந்தனையினை விரிவுபடுத்தும். கல்வி கூடங்களை திரைஅரங்குகளாக மாற்றுவதால் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், சமூகத்திற்கும் எந்த பயனும் இல்லை. இதனை அரசும் பல்கலைகழகங்களும் உணர்ந்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.