சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
கூடங்குளம் அணுமின்நிலையப் பகுதியில் தற்போது 2 அணுஉலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 4 உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அணுஉலை பூங்காவாக மாற்றும் திட்டத்தின் படி மேலும் 2 உலைகள் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இயங்கி வரும் இரு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் இவ் வளாகப் பகுதியிலேயே தற்காலிக சேமிப்பு மையத்தில் (Away Fron Reactor- AFR) சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றம் 2013ல் கூடங்குளம் தொடர்பான வழக்கில் 15 நிபந்தனைகளில் முக்கியமான ஒன்றாக நீண்டகால கழிவு மேலாண்மையினை செயல்படுத்திட உத்தரவிட்டது. இதன்படி அணுஉலைக் கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்கும் வகையில் ஆழ்புவி கிடங்கு அமைக்க 2022ல் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கால அவகாசம் கேட்டது. ஜூலை 2026க்குள் குறிப்பிட்ட நிரந்தர ஆழ்கிடங்கினை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இத்திட்டத்திற்கான இடத் தேர்வோ, கட்டுமானப்பணிகளோ இதுவரை நடைபெறவில்லை. இன்னும் கூடங்குளத்தில் தற்காலிக சேமிப்பு மையத்திலேயே அணுக்கழிவுகள் சேமிக்கப்பட்டு வருகிறது.
தமிழக முன்னாள் சபாநாயகர். M. அப்பாவு கடந்த டிசம்பர் 2025 ல் அணுஉலைக்கழிவுகள் வளாகப் பகுதியில் சேமிப்பது பாதுகாப்பற்றது எனவும் மக்கள் அதிகமாக வசிக்கும் இப்பகுதியில் இதுபோல் கழிவுகள் வைக்கப்படுவதால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக அணுக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட உள்ளதால் நிலத்தடி நிரந்தர சேமிப்பு மையம் அமைக்க வேண்டியத் தேவை இல்லை என மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதனால் தற்காலிக சேமிப்பு கிடங்கையே நிரந்தரமாக்கி விடும் நிலையே உள்ளது.
நிரந்தர ஆழமான நிலத்தடி சேமிப்பு கிடங்கு (Deep Geological Repository-DGR) அமைக்கப்பட வில்லை என்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கொள்கலன் கசிவு ஏற்பட்டால் Cs.137. Sr- 90 போன்ற கதிரியக்க பொருட்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும். ஃபுகுஷிமா பாதிப்பு போன்ற சூழலில் பல உலைகள் ஒரே இடத்திலும், அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அதே பகுதியில் இருப்பதாலும் பல மடங்கு ஆபத்து ஏற்படும் அபாயமே உள்ளது.சிறிய அளவிலான பாதிப்புகள் கூட புற்றுநோய், தைராய்டு பிரச்னைகள், மரபணு மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இயற்கை பேரிடர் மற்றும் போர் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு தற்காலிக சேமிப்பு கிடங்கு எந்த அளவில் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், வாழ்வாதாரம், உடல்நலன் பாதிக்கப்படும் நிலையினை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். அணுக்கழிவு ஆழ்கிடங்கு சேமிப்பகம் நிறுவிடும் தொழில்நுட்பம் இல்லை என்பதால் இந்தியாவில் இயங்கும் எல்லா அணு உலைகளும் இப்பிரச்னையின் பிடியில் உள்ளன..ஃபின்லாந்து நாடு உலகின் முதல் நிரந்தர அணுக்கழிவு மையத்தை நிறுவி உள்ளது. ஒரு மில்லியன் ஆண்டுகள் அணுக்கழிவுகளை பாதுகாக்கும் வகையில் சுமார் 450 மீட்டர் ஆழ சேமிப்பு மையத்தை ஒல்கிலூடோ தீவில் நிறுவி உள்ளது.மக்கள் நலன்கருதி இது போன்ற திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்துமா?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.