சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா 2026 ஐ மத்திய அரசு 10.8.26 ல் நாடாளுமன்றத்தில் அறிவித்து உள்ளது. தற்போது அறிமுகப்படுத்த ப்பட்ட மசோதா பிரிவு.2 மத்திய அரசுக்கு கனிம நிலங்களை ஒழுங்குபடுத்து வதற்கான கூடுதல் அதிகாரத்தை அளிக்கிறது. இது முழுமையாக மாநில அரசின் உரிமையினையும், வரி நிர்ணயத்தையும் பறிக்கும் நடவடிக்கையாகும். MMDR 1957 சட்டத்தில் பிரிவு 9D ன்படி கனிமவளங்களின் மீதான மாநில அரசுகள் வரி விதிக்கும் செயல் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாநிலங்களின் உரிமை இழப்பதோடு நிதிச்சுமையினையும் சந்திக்க நேரிடும்.
உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் மீதான நிலங்கள் மீது வரி மற்றும் செஸ் விதிக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உண்டு என 25.7.2024 ல் தெரிவித்தது. மேலும் நிலம் என்பது மாநில பட்டியலின் பிரிவு 18 ன் கீழ்வரும் என்பதால் மாநில அரசுகளுக்கு நிலத்தின் மீது வரிவிதிக்கும் அதிகாரம் உண்டு எனவும் தெரிவித்தது. வரலாற்று சிறப்பு மிக்க இத்தீர்ப்பை புதைகுழிக்குள் வைக்கும் விதமாக புதிய திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டாட்சி தத்துவமே கேள்விக்குறியாகி உள்ளது.
எதிர்காலப் பொருளாதார உற்பத்தியை கருத்தில் கொண்டு சுமார் 300 அரியவகை கனிமங்களை அமெரிக்கா கடந்த 2019ல் வகைப்படுத்தியது. இதையடுத்து அமெரிக்கா-இந்தியா இடையே 2021ல் கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகள் கனிமவளங்களை தங்குதடையின்றி எடுப்பதிலும், அதனை அழித்தொழிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலனை விட கார்பரேட் நலனில் கண்ணும், கருத்துமாக அவர்களது நலனை மையப்படுத்தி செயலாற்றி வருகிறது.
கடந்த 2023ல் மேற்கொண்ட சட்டதிருத்தம் மூலமாக வித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம், சிர்கோனியம் எனும் 6 அணுக்கனிமங்களை கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடவும், அக்கனிமங்களை எடுப்பதில் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கியது. மேலும் இந்தியாவில் 24 வகையான முக்கிய கனிமங்கள், 6 வகையான அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களை செயல்படுத்தும் முன்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என 2025ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.
இவ்வாறாக பெருநிறுவனங்கள் கனிமவளங்கள் கொண்டு செல்வதற்கு வசதியாக மத்திய அரசு சட்டதிருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களை மாநில அரசுகளிடம் இருந்தும் காப்பாற்றி இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்கு வசதியாக குறிப்பிட்ட சட்டதிருத்தத்தை மேற்கொண்டு உள்ளது. இதனால் மாநில உரிமைகள் பறிபோவதோடு மக்கள் நலனும், இயற்கை வளமும், சுற்றுச்சூழலும் பேராபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு மக்கள் உயிரையும், இயற்கை வளத்தையும் இரையாக்கிட வேண்டாம். எனவே மண்ணையும், மக்களையும், எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும், மாநில அதிகாரத்தையும் பறிக்கும் குறிப்பிட்ட சட்டதிருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.


