Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் பாழாகி வரும் அமராவதி ஆறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

திருப்பூர் மற்றும் கரூர் பகுதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பால் அமராவதி ஆறு மாசுபடும் நிலை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

காவிரியின் முக்கிய கிளைநதியாகத் திகழும் அமராவதி ஆறு பழனி மலைத்தொடரில் உற்பத்தியாகி அமராவதி அணை வழியாக பயணித்து திருப்பூர், கரூர் மாவட்டங்களை கடந்து காவிரியுடன் சங்கமிக்கிறது. சங்ககாலத்தில் ஆண் பொருநை அல்லது அன்பொருநை என அழைக்கப்பட்ட இந்த ஆறு ஆற்றங்கரை நாகரிகத்திற்கும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கி வந்தது. ஆனால் தற்போது பாழாகி வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.

குறிப்பாக திருப்பூர், கரூர் பகுதிகளில் உள்ள சாயப் பட்டறைகளில் வெளியேறும் சாயக்கழிவு ரசாயனங்கள், டெக்ஸ்டைல் நிறுவன கழிவுகள் இந்த ஆற்றில் கலக்கிறது. இதுபோல் கரூர், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது. இதனால் ஆற்று நீரின் தன்மை மாறி விஷமாகி நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை இல்லாத போதும், அனையில் நீர்மட்டம் குறைந்தபோதும் இந்த ஆறு வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் மணல் திருட்டு, கழிவு குப்பைகள் கொட்டுதல் உள்ளிட்டவற்றால் ஆறு மாசுபடுவதோடு பல்வேறு சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது.. இங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் நீரில் உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அளவுக்கு அதிகமாக உள்ளது தெரியவந்து உள்ளது. பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக கடும் உத்தரவுகளை பிறப்பித்தும் அவற்றை எவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இத்தகைய போக்கினால் பல நூற்றாண்டு பெருமை வாய்ந்த அமராவதி படிப்படியாக அமரர் ஆகிவருகிறது. இந்த ஆற்றை மீண்டும் பழைய பொலிவிற்கு கொண்டுவரவும், இதனை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதோடு, மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டியதும், அரசு தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டியதும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

மேலும் தொழிற்சாலை கழிவுகள் இங்கு கலக்காத வகையில் zero Liquid Discharge (ZLD) கண்டிப்பாக அமல்படுத்திட வேண்டும். நகரின் கழிவுநீர் நேரடியாக கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) முழுமையாக அமைத்து செயல்படுத்திட வேண்டும். இயற்கை வளங்களை காப்பது நமது கடமையாக கருதி அமராவதியை காக்க இதயத்தாலும், இரு கரத்தாலும் இணைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. என்ன செய்யப்போகிறோம் நாம்?