சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டு வழங்கிய இறுதி தீர்ப்பின்படி பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு ஆகும். நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் முடிவுகளை அமல்படுத்தும் சுயாதீனமாக மற்றும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்றது. மேலும் இது பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. வாரியத்திற்கு அணைகளை மேற்பார்வையிடும், நீர்திறப்பை கட்டுபடுத்தும், தீர்ப்பை கட்டாயமாக அமல்படுத்தும் முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் வாரியத்தின் கீழ் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் 2018ல் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery water managment Authority-CWMA)என்ற பெயரில் அதிகாரம் இல்லாத அமைப்பை உருவாக்கியது. இதற்கு உதவியாக காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையத்திற்கு உத்தரவினை அமல்படுத்திடும் வலுவான அதிகாரம் இல்லை. இந்த ஆணையம் கூட்டங்களை நடத்தி உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கிறது. ஆனால் அமலாக்கத்தில் பெரும் பலவீனம் உள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் உரிய நீர் கிடைப்பது இல்லை. இதனால் உச்சநீதிமன்றத்தையே நாடவேண்டிய கையறு நிலை தொடர்கிறது.
நிர்ணயிக்கப்பட்ட நீரினை விடாமல் கர்நாடகா அடம் பிடிப்பதும், மழை காலங்களில் உபரி நீரை திறந்து தமிழகத்தை வடிகால் ஆக்குவதும் வாடிக்கையாகிப் போனது. இருந்தும் குறிப்பிட்ட ஆணையம் வாய்திறக்காமல் உள்ளதால் தமிழ்நாட்டில் வருடந்தோறும் நீருக்காக தொடர்ந்து விவசாயிகள் போராடுவதும், இதனை வைத்து அரசியல் கட்சிகள் சதுரங்க விளையாட்டு நடத்துவதும் அன்றாட நிகழ்வுகளாகிப் போனது. இதனால் காகித கத்தியாய் குறிப்பிட்ட ஆணையம் காட்சி அளிக்கிறது. எவ்வித பலனும் இன்றி பயனும் இன்றி பார்வையாளர் போல் பரிதாபமாய் உள்ள ஆணையத்தின் பெயரில் மட்டுமே ஆணை உள்ளது. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு இது வீணாய் உள்ளது.
தற்போதும் சரிவர நீரை கர்நாடகா திறந்து விடாத நிலையில் தமிழக அரசு இம்மாதம் 3 ந்தேதி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளது. மேகதாது அணை கட்டவும் கர்நாடகா முயற்சித்து வரும் நிலையில் தமிழ்நாடு பாலைவனமாகாமல் தடுத்திடவும், ஆற்றுநீர் படுகையில் உள்ள பகுதிகளுக்கும் செல்லும் உரிமையினை நிலைநாட்டும் வகையில் மக்களின் முக்கிய நீர் ஆதாரத்தை காக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தற்போது உள்ள பல் இல்லாத பாம்பான ஆணையத்தால் நமது நீதியினை, உரிமையினை, வாழ்வாதாரத்தினை உறுதி அளிப்பது கானல் நீராகவே அமையும்.
அணைகளின் செயல்பாட்டை மேற்பார்வை இடவும், நீர் சேமிப்பை பங்கீடு செய்யவும், ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டை காக்கவும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் திறப்பை உறுதி செய்யவும், தீர்ப்பை மீறும் மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வலுவான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவர் மன்ற தீர்ப்பின் படி அமைத்திட வேண்டும். இதன்மூலமே நமது ஜனநாயகமும், அரசியல் அமைப்பு சட்டமும், கூட்டாட்சி கோட்பாடுகளும் நிலை நிறுத்துவதாக அமையும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

