Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் அராஜகம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்த சம்பவம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையினை ஏனைய மாநிலங்களில் வழங்கப்படுவது போல அதிகரித்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தங்கள் கோரிக்கையினை தமிழக முதல்வரிடம் தெரிவிக்க முயன்ற மாற்றுத்திறனாளிகளை கைது செய்து ராஜரத்தினம் விளையாட்டு திடலில் தங்க வைத்து உள்ளனர். பின்னர் இரவு 7 மணி அளவில் 16 பேருந்துகளில் இவர்களை திருமங்கலத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைப்பதாக கூறி ஏற்றி சென்று உள்ளனர்.

ஆனால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் என இவர்களை பேருந்தில் சிறைபிடித்து போலீசார் இரவு 2 மணிவரை அலைக்கழித்து உள்ளனர்.ராஜரத்தினம் திடலில் இருந்தவர்கள் அங்கிருந்த மொபைல் டாய்லெட் மற்றும் வெளியில் இருந்த பொதுகழிப்பறை யினை பயன்படுத்த இயலாதபடி பூட்டி உள்ளனர். அங்கிருந்த மின்விளக்குகளை அணைய விட்டு இருளில் தவிக்க விட்டு உள்ளனர். குடிக்க நீரோ, உணவோ எதுவும் வழங்காமல் அவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கி உள்ளனர்.

நியாயமான முறையில் தங்கள் கோரிக்கையினை தெரிவிக்கும் வகையில் போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் அலைக்கழிப்புக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். குறிப்பிட்ட மனிததன்மை அற்ற இத்தகைய அராஜகப் போக்கில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை காத்திடும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சாசனத்தில் 2007 ல் 7வது நாடாக இந்தியா கையெழுத்து இட்டு உள்ளது. ஆனால் அவர்களது கண்ணியத்தினை காக்கவும் உடன்படிக்கையினை நடைமுறைபடுத்தவும் தமிழக அரசு தவறிவிட்டது. இத்தகைய நடவடிக்கைகளால் மனஉளைச்சலை உருவாக்கி போராட்டத்தை ஒடுக்குவதே போலீசாரின் நோக்கமாக இருந்து உள்ளது அவர்களது நடவடிக்கை மூலம் தெரிகிறது.

சமூக நீதியை காப்பதாக கூறும் ஆட்சியாளர்கள் விளிம்புநிலை மக்களின் உரிமைகளை, மாற்றுத்திறனாளிகளின் போராட்டங்களை ஒடுக்குவதின் மூலமாக அதன் கொள்கையில் இருந்து தடம்புரண்டு செல்கிறது. மாற்றுத் திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக உள்ளாட்சிகளில் நியமித்த அரசு அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு காதுகொடுக்க மறுப்பது ஏன்? அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தயக்கம் ஏன்?