சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை வட்டாரம் தோலம்பாளையம் அருகே அமைந்துள்ள மலைக்கிராமம் கோபனாரி.இங்கு சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த இருளர் பிரிவு பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதைச் சுற்றி பட்டி சாலை, சிங்குலி, ஆலங் கண்டி, செங்குட்டை, மூனுக்குட்டை உள்ளிட்ட பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கேரளப் பகுதிகளான அட்டப்பாடி, மன்னார்காடு, மட்டத்துக்காடு போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இது இரு மாநில எல்லைப்பகுதி என்பதால் வாழ்வாதாரத்திற்கு இருபக்க இணைப்பும் மிக அவசியம். இந்நிலையில் கொடுங்கரை பள்ளம் என்ற ஆழமான பள்ளத்தாக்கு வழியாகவே தமிழக கோபனாரி பகுதிக்கும் கேரள மாநில பகுதியான மட்டத்துக்காடு பகுதிக்கும் செல்லவேண்டிய நிலை உள்ளது. குறிப்பிட்ட சாலையினை இணைக்கும் இப்பள்ளப் பகுதியில் பாலம் எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் இதன் சுற்றுவட்டார பகுதி மக்களும், இவ்வழியாக செல்லும் வாகனங்களும் தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளது. வருடத்தின் பெரும்பகுதி இந்நீர்நிலையில் வெள்ளம் செல்லும் என்பதாலும், வெள்ளப்பெருக்கு எப்போது வரும் என்பது நிச்சயிக்க முடியாது என்பதாலும் இப்பகுதியினை கடக்க முயன்ற பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர்.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலத்தில் நீர் கரைபுரண்டு ஓடுவதால் இச்சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டு இப்பகுதிகள் தனித்தீவுகளாகி விடுகின்றன. இதனால் கூலி வேலைகளுக்கு செல்வோர் வாழ்வாதாரம் முற்றிலுமாக தடைபடுகிறது.4 கிமீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல 15கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவ, மாணவியர், விவசாயிகள், கேரளப் பகுதிக்கு விற்பனைக்கு கொண்டுசெல்லப்படும் காய்கறி, வாழை, உணவுப் பொருட்கள், போக்குவரத்து பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையே நீடித்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் வனப்பகுதியில் உள்ள இம்மலை கிராமங்கள் கி.மு.1ம் நூற்றாண்டு முதல் கி.பி 4ம் நூற்றாண்டு வரையிலான சேரர் ஆட்சிகாலத்தில் பாலக்காடு கணவாய் வழி வர்த்தக நுழைவாயில் ஆக இருந்த பெருமை படைத்தது. தற்போது இவ்வழிப்பயணம் என்பது பாதுகாப்பு அற்ற நிலையில் பாலம் என்பது தேர்தல்கால வாக்குறுதிகளாகவே இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் தேவை என்பதோடு வாழ்வாதாரம், கல்வி மருத்துவம். அவசர கால உதவி ஆகியவற்றிற்கான அடிப்படை உரிமையாக பாலம் உள்ள நிலையில் தமிழக அரசு இக்கிராம மக்களின் துயரை துடைப்பது எப்போது?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

