Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்படும் புகார்களால் மரக்கடத்தல் வேட்டை அதிகரிப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனை

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தமிழக அரசு பொதுப்பணித்துறையில் இருந்து நீர் ஆதாரத்துறையினை தனியாக பிரித்து கடந்த 2021 ஜூன் முதல் செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் மூலம் நீர்வள ஆதாரங்களை திட்டமிடுதல், கட்டுமானம், பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் நிலையில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, செருப்பாலூர் ஆகிய பகுதிகளில் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆறுகள், அணைகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு உரிய மரங்கள் நீர்வள ஆதாரத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அயனி, தென்னை, பலா, தேக்கு, மா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் நீர்நிலைகளின் அருகாமையில் உள்ள நிலையில் இவை தனிநபர்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சட்டவிரோதமாக இம்மரங்கள் வெட்டியவர்கள் மீது அபராதம் விதிக்கவும், காவல்துறையிடம் புகார் அளித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் இயலும்.

இதன்படி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் பலர் அபராதம் செலுத்தி உள்ளனர். வெட்டியவர்கள் பற்றிய விபரம் தெரிந்தும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையிலும், வெட்டியவர்கள் பற்றிய விபரம் தெரியாத நிலையிலும் குறிப்பிட்ட துறையினர் அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இதன்படி மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களிலும் மரம் வெட்டுதல் தொடர்பான புகார் ஆயிரகணக்கில் உள்ளன. ஆனால் இவை கிணற்றில் போட்ட கல் போல எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு முடங்கி கிடக்கின்றன.

மாவட்டத்தின் இயற்கை வளத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் இத்தகைய மரங்கள் பெரும் பங்கு வசிக்கின்றன. இது போன்று பெருகிவரும் மரத் திருட்டுகளால் மாவட்டத்தின் பருவநிலை மாற்றம் அடைய தொடங்கி உள்ளதோடு, அரசுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாய் உள்ளன. பட்டா நிலங்களில் உள்ள பனை, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட மரங்கள் வெட்ட முறையாக அனுமதி பெற வேண்டிய நிலையில் எவ்வித ஒப்புதலும் இன்றி சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் பெருகிவரும் சூழலில் அதனை கட்டுபடுத்த தவறுவதால், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவதால் குற்றங்கள் தங்குதடையின்றி தொடர்கிறது.

நீர்வள ஆதாரத்துறை புகார் அளித்தும் காவல்துறையினர் இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டாததால் கடந்த பல வருடகாலமாக இத்தகைய குற்றவழக்குகள் தேங்கி உள்ளதோடு சமூக விரோதிகளால் மேலும் இதுபோல சம்பவங்கள் தொடர்வது கட்டுபடுத்த இயலாத நிலையில் உள்ளது. எனவே இத்தகைய சம்பவங்களில் தேங்கிய வழக்குகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதோடு, மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் கண்காணித்து மர அழிப்பினை தடுத்து மாவட்ட பசுமை இழப்பினை தவிர்த்திட வேண்டும்.