சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மயிலப்பன் சேர்வைக்காரர் பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்துப் போராடிய தமிழ் தளபதி. ராமனாதபுரம் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டில் உள்ள சித்திரங்குடி பகுதியில் பிறந்தவர். ராமனாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் (1762- 1809) படைப்பிரிவில் சேர்ந்து தளபதியாக உயர்ந்தவர். இதனால் சேர்வைக்காரர் என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது.8.2.1795 அன்று ஆங்கிலேய கம்பெனி சேதுபதி மன்னரை பதவிநீக்கம் செய்து திருச்சி கோட்டையில் சிறை வைத்தது. கம்பெனியின் வரிவசூல் மற்றும் சுரண்டலுக்கு எதிராக மக்களை திரட்டி மயிலப்பன் 1795 முதல் 1802 வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த 24.4.1799 அன்று இவர் தலைமையிலான படை முதுகுளத்தூர் கம்பெனி கச்சேரியினை தாக்கியது. மேலும் அபிராமம் கச்சேரி, கைத்தறி கிட்டங்கி, கமுதி கச்சேரி மற்றும் நெற்களஞ்சியங்களை தாக்கியது. இந்த கிளர்ச்சி சுமார் 42 நாட்கள் நீடித்து முதுகுளத்தூர் மற்றும் கமுதி பகுதிகளை கம்பெனி நிர்வாகத்தில் இருந்து விடுவித்தது. சிவகங்கை மருதுபாண்டியர்களுடன் இணைந்து பாஞ்சாலங்குறிச்சி, காடல்குடி, நாகலாபுரம் போன்ற பாளையக்காரர்களின் ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தார். மருது சகோதரர்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதிகளில் ஒரு வராக இருந்தார்.
மருதுபாண்டியர்கள் 1801ல் நடந்த இறுதி போரில் தோல்வி அடைந்த பிறகு மயிலப்பன் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கம்பெனியின் வெகுமதிக்காக காட்டி கொடுக்கப்பட்டு மாவீரன் மயிலப்பன் கைது செய்யப்பட்டார். மூன்று மாத கடுமையான சிறை தண்டனைக்குப் பின் 6.8.1802 அன்று அபிராமம் பகுதியில் தூக்கில் இடப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால தமிழ் வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். Dr.எஸ்.எம்.கமால் எழுதிய மறவர் சீமை மாவீரன் மயிலப்பன் உள்ளிட்ட நூல்கள் மற்றும் பிரிட்டிஷ் பதிவுகள் (military consultations. Revenue Records) இவரது வரலாற்றை உறுதிபடுத்துவதாய் உள்ளன.
மாவீரன். மயிலப்பன் சேர்வைக்காரர் நினைவை போற்றும் விதமாய் அவர் தூக்கிலிடப்பட்ட அபிராமம் பகுதியில் தமிழக அரசு இவருக்கு நினைவு மண்டபம் அமைத்திட வேண்டும். மேலும் இதில் வரலாற்று ஆவணங்கள். பிரிட்டிஷ் பதிவுகளின் நகல்கள், போராட்ட விபரங்கள் காட்சிபடுத்தப்பட வேண்டும். பள்ளி வரலாற்று பாடங்களில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்களில் இவரது பங்களிப்பை இடம்பெற செய்ய வேண்டும். மறைந்த ஆகஸ்ட் 6ம் தினம் இவரது நினைவு தினத்தை அரசின் சார்பில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திட வேண்டும்.
ராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரதான கட்டிடங்கள் மற்றும் பேருந்து நிலையம், சாலைகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டு நினைவுகூற வேண்டும். மேலும் இவரது பணியை போற்றும் விதமாய் அஞ்சல் தலை வெளியிடப்பட வேண்டும். இதன்மூலம் மருதுபாண்டியர், கட்டபொம்மன் போன்றவர்களுடன் தென்னிந்திய ஆரம்பகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற மயிலப்பன் சேர்வைக்காரர் பணிக்கு பெருமை சேர்ப்பதாகவும், இவ்வரலாற்று நாயகரை வாழும் தலைமுறைக்கும், வரும் தலைமுறைக்கும் தெரிவிப்பதாகவும் அமையும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.