சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் இதையொட்டி உள்ள வருசநாடு, தும்மக்குண்டு, அகமலை போன்ற பகுதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக பகுதியாக 2021ல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 5 தலைமுறைகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வாழ்விடங்களில் வனத்துறை தீவிர கெடுபிடிகளை செய்து வருகிறது. இவர்களது வீடு பழுதுபார்க்க சிமெண்ட் மற்றும் ஷூட் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை விதித்தது. விவசாய பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிப்பதுடன் மாலை 6 மணிக்கு பிறகு சாலையினை மூடிவிடுவதால் நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிப்பு அடையும் சூழலே உள்ளது.
இப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற மறுப்பதோடு, சாலை சீரமைப்புக்கு என அரசு நிதி ஒதுக்கிய போதும் வனத்துறை தடை விதித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நிலையில் பழங்குடி மக்களை “ஆக்கிரமிப்பாளர்கள்” என தெரிவித்து அவர்கள் வாழ்விடங்களில் இருந்து அகற்ற வனத்துறை நடவடிக்கையினை தீவிரப்படுத்தி உள்ளது.
வன உரிமை சட்டம். 2006 (Forest Rights Act- FRA) கடந்த 29.12.2006 ல் இயற்றப்பட்டு 31.12.2007 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் வாழும் 10 கோடி வனவாழ் மக்களின் நலனை பாதுகாப்பதற்காக கொண்டு வந்த இந்த சட்டத்தின்படி 3 தலைமுமுறைகளாக வனப்பகுதியில் பாரம்பரியமாக வாழும் பழங்குடியினருக்கு வனப்பகுதியில் வாழ முழு உரிமை அளிக்கிறது. மேலும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு என குடும்பத்திற்கு 4 ஹெக்டேர் நிலப்ப பகுதியினை அரசு வழங்கிட வேண்டும். மேலும் தேன், மருத்துவ செடிகள், மூங்கில், தேக்கு இலைகள் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து விற்கவும் உரிமை அளிக்கிறது.மேய்ச்சல் உரிமை/ நீர்நிலைகளில் மீன்பிடி உரிமை என பல்வேறு உரிமைகளை அளிப்பதோடு இவர்களை வனபாதுகாவலர்கள் என சட்டம் சொல்கிறது.
வன உரிமைச்சட்டம் 2006 பிரிவு 3(1)li) ன் கீழ் சமூக வன வள உரிமை இவர்களுக்கு அளிப்பதோடு வனவளங்களை பாதுகாக்க மீட்டெடுக்க நிர்வகிக்க உரிமை அளிக்கிறது. இது வெறும் பயன்பாட்டு உரிமை அல்ல. மேலாண்மை உரிமையாகும். பிரிவு 3(1) (a) வன நிலத்தில் வாழ்வதற்கும், சுய சாகுபடி செய்வதற்கும் உரிமை அளிக்கிறது. இச்சட்டத்தின் படி தங்களுக்கு நில உரிமை பட்டா மற்றும் வன உரிமைகளை மேகமலையில் வாழும் பழங்குடி மக்கள் கேட்டுவருகின்றனர். ஆனால் இவர்களது உரிமைகள் நிராகரிக்கப்படுவதோடு சட்டத்திற்கு புறம்பாக இவர்களை வாழ்விடங்களில் இருந்து அகற்ற வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கையினால் மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5000 குடும்பத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவர்களை அகற்றும் முயற்சியினை வனத்துறை கைவிடுவதோடு வன உரிமைச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு நில உரிமை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும். இப்பகுதிமக்களின் அடிப்படை வாழ்வுரிமையினை அரசு உறுதிபடுத்திடவேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.