நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலை பல்வேறு கிராமங்களின் இணைப்புச் சாலையாக உள்ளது. இம்மார்க்கமாக திங்கள்நகர், கருங்கல், திக்கணங்கோடு, தேங்காய்பட்டணம், இரணியல், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வரும் நிலையில் இது பிரதான சாலையாக திகழ்கிறது. இச்சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் இருப்புப்பாதையில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.இதையொட்டி இங்கு ஏற்கனவே இருந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கியது.
இப்பால வேலை நடைபெறுவதை ஒட்டி இவ்வழியாக சென்றுவந்த பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. பரசேரி, நான்குவழிச்சாலை, பேயன் குழி பாலம் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்ட போதிலும் இப்பகுதியில் சாலை சரிவர சீரமைக்கப்படாததாலும், போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பெரும்பாலான பேருந்துகள் வில்லுக்குறி, தக்கலை, இரணியல் மார்க்கமாக செல்கின்றன. இதனால் பல்வேறு கிராமங்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் இக்கிராம மக்களும், மாணவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பிட்ட பாலப்பணி 8 மாத காலத்தில் முடிந்துவிடும் என ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாதங்கள் 8 ஆனபின்பும் இதுவரை அடிப்படை பணிகளே நடைபெறாத நிலை உள்ளது. குறிப்பாக இங்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மிகவும் பழமையானவை என்பதால் இவை அடிக்கடி பழுதாகி விடுகின்றன. இதனால் வேலைகள் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஆமை வேகத்திலேயே பணிகள் நகர்கின்றன. குறிப்பிட்ட இடத்திற்கு தெற்குபக்கமாக அமைக்கப்பட்ட நீர்வழி பாலமும் உரியமுறையில் இல்லாமல் இருபுறமும் உயரமாக உள்ளதால் சைக்கிளில் கூட இதில் பயணிக்க முடியாத நிலையே உள்ளது.
மந்தகதியில் நடைபெறும் பாலப்பணிகளால் இப்பாலம் வேலை முடிய இன்னும் இரு ஆண்டுகாலம் ஆகும் பரிதாபநிலையே உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும், பயணிகளும், மாணவ மாணவிகளும் பல கி.மீ சுற்றி பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் காலவிரயம், பொருள் இழப்பு, காலதாமதம், எரிபொருள் இழப்பு, மன உளைச்சல். அலைக்கழிப்பிற்கு இவர்கள் உள்ளாகின்றனர். பல்வேறு வகையில் மக்கள் பாதிப்பினை சந்தித்து வந்த போதும் குறிப்பிட்ட பணிகள் நத்தை வேகத்திலேயே நடந்து வருகின்றன. எனவே மக்களின் தொடரும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் விதமாக குறிப்பிட்ட ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குருந்தன் கோடு ஒன்றிய செயலாளர் D.தேவதாஸ், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் R. சாராபாய்,குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் E.சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.


