Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்ட நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?

சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்ட நூற்றாண்டை நினைவுகூரும் சமூக நீதி வரலாற்று நிகழ்வு

குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற தாணுமாலயன் கோயில். சிவன்.பிரம்மா. விஷ்ணு ஒரே வடிவில் உள்ள தலம். 134 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம், அழகிய சிற்பங்கள், 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்தலம் 9ம் நூற்றாண்டை சேர்ந்தது. பல நூற்றாண்டு காலமாக தீண்டாமை காரணமாக பறையர், புலையர், ஈழவர்,நாடார்,குறவர் உள்ளிட்ட பல சமூகத்தினரை கோயில் தெருக்களுக்கே செல்ல முடியாத நிலை இருந்தது. தெரு நுழைவாயில்களில் தெரு மறைச்சான் (மூங்கில் தட்டிகள்) வைத்து தடைசெய்து இருந்தனர். கோயில் உள்ளே நுழைவது என்பது இவர்களது தொலைதூர கனவாகவே இருந்தது.

திருவிதாங்கூர் மன்னர் ஆளுகைக்கு உட்பட்ட இப்பகுதியில் நிகழும் சமூக அநீதிக்கு எதிராக 19.1.1926ல் கோட்டாரில் Dr.M.E.நாயுடு இல்லத்தில் விவாதிக்கப்பட்டது. 19.2.1926 ல் Dr.M.E.நாயுடு தலைமையில் H.பெருமாள் பணிக்கர், பி.சி.தாணுமாலைய பெருமாள், காந்தி தாஸ் மற்றும் திரளான மக்கள் சுசீந்திரத்தில் சன்னதி தெரு நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்தது இருப்பினும் 10 ஆண்டுகாலமாக நடைபெற்ற தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து அரசு பணிந்தது.

திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ சித்ரதிருநாள் பலராம வர்மா 12.11.1936 ல் கோயில் நுழைவுப் பிரகடனத்தை வெளியிட்டார். இதன்படி அனைத்து இந்து கோயில்களும் சாதி வேறுபாடின்றி மக்கள் செல்லும் வகையில் திறந்து விடப்படும் என தெரிவித்தார். 1937 ஜனவரி மாதம் மகாத்மா காந்தி தாழ்த்தப்பட்ட சமூக மக்களுடன் கோயிலுக்குள் சென்று வழிபட்டார். வைக்கம் போராட்டத்தை அடுத்து இது தென் இந்தியாவின் முக்கிய சமூக சீர்திருத்த வெற்றிகளில் ஒன்றாகும். மேலும் 1939 ல் மதுரையில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டத்திற்கும் இதுவே முன்மாதிரியாக அமைந்தது. 1947ல் சென்னை மாகாணத்தில் கோயில் நுழைவு அங்கீகாரச்சட்டம் வரவும் உதவியது.

குறிப்பாக Dr.நாயுடு உள்ளிட்ட உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முன்னின்று இப்போராட்டத்தினை நடத்தியது சாதி ஒற்றுமைக்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆன நிலையில் சமூகநீதி, சாதி ஒழிப்பு, அஹிம்சை போராட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கோயில் நுழைவுப் போராட்டம் நினைவூட்டுகிறது. இதனை வெறும் சம்பவமாக கடந்து செல்லாமல் சாதி பாகுபாடு, மனித உரிமை மற்றும் சமூக சீர்திருத்தத்தின் அடையாளமாக கருதி தமிழக அரசு இதனை நினைவுகூற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவினை அரசு நடத்தியது போலவே சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்ட நூற்றாண்டு நிகழ்வினையும் நினைவு கூர்ந்து விழா எடுக்க வேண்டும். இதையொட்டி தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். சுசீந்திரம் பகுதியில் நூற்றாண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட வேண்டும். மேலும் கோவில் சுற்றுப்பாதையில் இவ்வரலாற்று நிகழ்வுகளை குறிக்கும் வகையில் தகவல் பலகைகள் அமைக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்திடும் வகையில் சமூக சீர்திருத்த வரலாற்று மையம் அமைப்பதோடு பள்ளி பாடத்திலும் இதனை இடம்பெற செய்ய வேண்டும். இந்த நினைவு கூறல் வெறும் சம்பிரதாய சடங்கு அல்ல.. சமத்துவம், மனித கண்ணியம், சாதி ஒழிப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் சமூக சீர்திருத்த வரலாற்றின் பெருமைமிக்க அத்தியாயம்.

சுசீந்திரம் கோயில் நுழைவு வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பெறுமா?
சமூக நீதி வரலாற்றில் சுசீந்திரம் போராட்டத்தின் முக்கியத்துவம்
சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படுமா?
சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்: சமூக நீதியின் வரலாற்றுச் சின்னம்
நூற்றாண்டை எட்டிய சுசீந்திரம் போராட்டத்திற்கு நினைவுத்தூண் கோரிக்கை
கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றை பாதுகாக்க வேண்டிய அவசியம்
சுசீந்திரம் சமூக சீர்திருத்த போராட்டத்திற்கு அரசு மரியாதை செலுத்துமா?
சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம் 100 ஆண்டுகள்: நினைவுத்தூண் அமையுமா?
சுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்ட நூற்றாண்டு: அரசு நடவடிக்கை எப்போது?
தீண்டாமை ஒழிப்பின் வரலாறு: சுசீந்திரம் போராட்டத்தை நினைவுகூர வேண்டிய நேரம்