Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் கொலை – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சமூக அமைப்புகள் கண்டனம்

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றவள் வீடு திரும்பாத நிலையில் தேடிய போது புதருக்குள் சடலமாக கிடந்தாள். உடலில் ஏற்பட்டு உள்ள காயங்களால் அவள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது உறுதியானது. இதுதொடர்பாக புகாரை ஏற்க மறுத்த விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. நடைபெற்று உள்ள கொடூரமான இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

தமிழ்நாட்டில் சிறுமி முதல் மூதாட்டி வரையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இரவு முழுவதும் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் காலையில் 10 கி.மீ தூரம் நடந்து காவல்நிலையம் சென்று அவர் புகார் அளித்தபின்பே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயம்புத்தூர் கல்லூரி மாணவி காரில் நண்பர்களுடன் இருந்த போது 2 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி அருகே 70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் இவரது கணவர் கொலை செய்யப்பட்டார். இவை எல்லாம் கடந்த சில மாதங்களில் நடந்து நமது மனதைவிட்டு கடந்து போகாத சம்பவங்கள். இதன்மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதையே இவை வெளிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக NCRB ஆய்வுகள் தெரிவித்த போதிலும் சமீபகாலமாக தொடரும் குற்ற சம்பவங்கள் அதனை பொய்யாக்கி வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2023ல் 406 என்ற எண்ணிக்கையில் இருந்து 2024ல் 471 ஆக பெருகி 16% உயர்ந்து உள்ளது. இதுபோலவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், கொலைகளும் அதிகரித்து வருவது சமூக பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளதை தடுத்திடும் வகையில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வழக்குகள் மீதான விசாரணை விரைவு படுத்தப்படுவதோடு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.