Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வாலிபர் மரணம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தூத்துக்குடி போலீஸ் காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக லாக்கப் மரணங்களை தடுக்க கோரும் சமூக பொதுநல இயக்கம்

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அருணாசலம் 17.7.26 அன்று சட்டவிரோத மது விற்பனை வழக்கில் சவுத் போலீஸ் நிலைய போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர் 23 ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். 4 போலீசார் அருணாசலத்தை தாக்கியதால் அவர் உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். லாக்கப் மரணங்கள் தொடர்நிகழ்வாக தமிழகத்தில் அரங்கேறி வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.

இம்மாதம் 13ந்தேதி நாகர்கோவில் சிறையில் இருந்த குட்கா வழக்கில் கைதான சபரி வர்மன் என்பவர் சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகள் தாக்கியதில் உயிர் இழந்தார். சிவகங்கையில் 2025ல் காவலர் அஜித்குமார் காவலர்கள் தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கியதால் உயிர் இழந்தார். 2020 ல் சாத்தான் குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டனர். 2026 ல் மார்ச் 15 வரையிலான காலத்தில் மட்டுமே தமிழகத்தில் 7 சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிகாலத்தின் போது மட்டும் 35 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக லாக்கப் மரணங்கள் நடைபெற்று வருவது நிர்வாக சீர்கேட்டையும், காவல்துறையின் அத்துமீறலையும் வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய குற்றவாளிகளை காவலர்களே தண்டனை அளிப்பது ஏற்புடையது ஆகாது.இது காவல்துறை மீதான நம்பகதன்மையினை சீர்குலைப்பதோடு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது.

உச்சநீதிமன்றம் D.K.Basu வழக்கில் 18.12.1996 ல் காவல் நிலைய சித்ரவதைகள், லாக்கப் மரணங்கள் தடுக்க 11 கட்டாய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இவை அரசியல் அமைப்பின் படி வாழ்வுரிமை, கைது செய்யப்படும் உரிமைகள் அடிப்படையில் அமைந்தவை. இவை போலீசாருக்கு மட்டுமில்லாது CBI, ED, CRPF போன்ற அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் பொருந்தும். இதனை சட்டபூர்வமாக பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உட்படுத்தலாம்.

இத்தகைய வழிகாட்டுதல்கள் காவல்துறையினரால் கடைபிடிக்கப் படுவதில்லை. இதனால் காவல்/சிறை மரணம் தொடர்கதை யாகிறது. அனைத்து காவல் நிலைய லாக்கப் விசாரணை அறைகளில் CCTV பொருத்தப்பட வேண்டும். மனித உரிமை மற்றும் சட்டபூர்வ காவல் நடைமுறை பயிற்சி போதுமானதாக இல்லை. எனவே காவலர்களுக்கு இதற்கான முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் அமுல்படுத்துவதோடு அதனை கண்காணிக்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் நடைமுறை படுத்தப்பட வேண்டும். இனியும் ஒரு லாக்கப் மரணம் நிகழாமல் தடுத்திட இதனை கடைபிடித்திட வேண்டும்.