Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
Follow Us: info@tnspi.org +91 99944 54417
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் 40 நாட்களாக பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் பரிதவிப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்ய முடியாமல் மக்கள் அவதி

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

குமரி மாவட்டம் தோவாளை சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் ஆரல்வாய்மொழி (தெற்கு), குமாரபுரம், ஆரல்வாய்மொழி (வடக்கு), சண்முகபுரம், தோவாளை, மாதவலாயம், வீரமார்த்தாண்டன்புதூர், செண்பகராமன்புதூர் ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் எல்கைக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி (தெற்கு) வருவாய் கிராம பகுதியைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட அலுவலகத்தில் நிலபுலன்களை வாங்கவோ/ விற்கவோ உரிய ஆவணங்களை கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பதிவு செய்ய இயலாமல் தவித்து வருகின்றனர். குறிப்பிட்ட கிராமப் பகுதியின் வில்லங்க சான்று (Encumbrance Certificate) EC பெற இயலாத நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் தங்கள் அவசர தேவைக்கென நிலபுலன்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ, வங்கி கடன் பெறவோ ஆவண பதிவு செய்ய இயலாத நிலையில் இவர்கள் எப்பணியும் செய்ய இயல்வதில்லை. இது குறித்து இப்பகுதி மக்கள் முறையிட்டும் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் இப்பிரச்னை நிவர்த்தி செய்ய இயலாத நிலையே நீடித்து வருகிறது.

மக்கள் நலனை மனதில் கொள்ளாமல் அவர்களது உரிமைக்கு புறம்பாக துறைசார்ந்த குறையினை துரிதகதியில் சீரமைக்காது மக்களை அவதிக்கு உள்ளாக்கி வரும் போக்கினை கண்டிக்கின்றோம். பத்திரவு பதிவுத் துறை டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி மக்களுக்கான பணிகளை எளிமை மற்றும் விரைவு படுத்தி வரும் காலகட்டத்தில் இதுபோன்ற சிறு பிரச்னைகளை கூட சீரமைக்காமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகளின் போக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.

தமிழக அரசுக்கு பத்திரப்பதிவு துறை அதிகமான அளவில் வருவாய் ஈட்டி தரும் நிலையில் அதன் வருவாயினை மட்டும் எண்ணிக் கொள்பவர்கள் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை எண்ணிப் பார்ப்பதில்லை. குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையினை துரிதகதியில் நீக்கி மக்கள் துயரங்களை நீக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து சமூக பொதுநல இயக்கம் போராட்டத்தில் ஈடுபடும்.