குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து புளிமூட்டு கிராமம் பகுதிமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களது தேவையினை கருத்தில் கொண்டு இப்பகுதியில் ஆழ்குழாய்கிணறு அமைக்க அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்வதால் இப்பகுதி நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திட இயலும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதை கருத்தில் கொண்டு 2020- 21 நிதி ஆண்டில் 15 வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ 2 லட்சம் செலவில் இங்குள்ள நாராயணசாமி நிழல் தாங்கல் அருகாமையில் உள்ள பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு குறிப்பிட்ட ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட இடம் மேற்பகுதி மூடப்பட்ட நிலையில் இப்பகுதியை அடையாளம் காணும் வகையில் சிறிய அளவிலான தூண் அமைக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து அருகாமையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றி கிராம மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் அடிக்கல் நாட்டப்பட்டு வருடங்கள் 5 ஆனபின்பும் இக்குடிநீர் திட்டம் மட்டும் செயல்படுத்தப்படாத நிலையில் குறிப்பிட்ட அடிக்கல் மட்டும் காட்சிப்பொருளாக காட்சி அளிக்கின்றது. இதனால் அரசு பணம் விரயம் ஆகி உள்ளதோடு கிராம மக்களும் இத்திட்டத்தால் பயன்பெற இயலாத நிலையே உள்ளது.
அடிக்கல் நாட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இத்திட்டம் மீண்டும் உயிர்த்தெழுந்தால் இக்கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவர். தற்போது குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகவும் அவதிப்படும் இப்பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதின் மூலம் அவர்களது நீர் பிரச்னை நிரந்தரமாய் அகலும். எனவே செயல்படுத்தப்படாமல் முடங்கி உள்ள குடிநீர் திட்டத்தினை இப்பகுதியில் நிறைவேற்றிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி- மத்திய மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி, நிர்வாகிகள் D. அந்தோணி அருள், A.இராமசந்திரன், R. யூஜின் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

